Contact Us

Tips Category View

தைலங்கள்

மருந்துச் சத்துக்களைக் கொண்டு செறிவூட்டிய எண்ணெய்க்குத் தைலம் என்று பெயர்.
தைலம் என்பது உண்மையில் எள்ளின் நெய்யைக் குறித்தாலும் இங்கு ஆகு பெயரால் எள்ளின் நெய்யால் கிரகித்துக் கொள்ளப்பட்ட மருந்துச் சத்துக்கள் செரிந்த மருந்துக்கு தைலம் எனப்படும்.

இம்முறையில் நோய் தீர்க்கும் மருந்துகளின் சாறுகள் கியாழங்கள், சூரணங்கள், கற்கங்கள், பால் ஆகியன எண்ணெயுடன் குறிப்பிட்ட செய்முறைப்படி சேர்க்கப்பட்டு அடுப்பிலேற்றி எரித்துக் காய்ச்சி வடித்து எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இந்த செய்முறையின் போது மருந்து சரக்குகளின் பிணி நீக்கும் சத்துப் பொருட்கள் எண்ணைய்ப் பொருள்களால் கலந்து கொள்ளப்படுகின்றன.
தைலங்களைத் தயாரிக்க கற்கம், திரவம், நெய்ப் பொருள் என்ற மூன்று பொருட்கள் தேவைப்படுகின்றன.

கற்கம்:
நோய் நீக்கும் மருந்துச் சரக்குகள் நன்கு பொடியாக்கப் பட்டோ அல்லது விழுது போன்று அரைக்கப்பட்டோ இருக்கும் நிலையில் கற்கம் என்று அழைக்கப்படுகின்றன.

திரவம் :
கற்கம் நன்கு கரைந்து மருந்தாகவும், நெய்ப் பொருட்களின் மருந்துச் சத்துக்களை கிரகித்துக் கொள்ளும் தன்மை மேம்படவும் சேர்க்கப்படும் சாறு வகைகள், கஷாயங்கள், மாமிச ரசங்கள், நீர், பால், தயிர், மோர் போன்ற நீர்ம ஊடகங்களுக்கு திரவம் என்று பெயர்.

நெய்ப் பொருட்கள் :
தைலம் காய்ச்சும் போது மருந்து சரக்குகளில் இருந்து நோய் தீர்க்கும் சத்துப் பொருட்களை கிரகித்து வைத்துக் கொள்வதற்காகச் சேர்க்கப்படும் பலவிதமான தாவர எண்ணெய்கள், நெய், விலங்கின் கொழுப்புகள் ஆகியவற்றுக்கு நெய்ப்பொருள் என்று பெயர்.
மேற்கூறிய மூன்று பொருட்களையும் ஒன்று சேர்த்து அடுப்பிலேற்றி முறைப்படி காய்ச்சும் போது அவற்றிலுள்ள நீர்ச்சத்து முழுவதும் சுண்டி விடுவதுடன் மருந்துச் சரக்குகளின் பிணி நீக்கும் சத்துக்களும் எண்ணெய்களால் கிரகித்துக் கொள்ளப்படவும் ஏதுவாகிறது. பின்னர் இவற்றை வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும்.

பொதுவாகத் தைலம் காய்ச்ச நல்லெண்ணையே பயன்படுத்தப்பட்டாலும் தேங்காய் எண்ணெய், விளக் கெண்ணெய், கடுகெண்ணெய், வேப்பெண்ணெய் போன்றவைகளும் தேன், மெழுகு, முட்டையின் மஞ்சட்கரு, வாலுளுவையரிசி ஆகியனவற்றிலிருந்து சிதைத்து வடித்தெடுக்கப்படும் எண்ணெய்களும் தைலம் காய்ச்சப் பயன்படுத்தப்படுகின்றன.

செய்முறை :
தைலங்கள் செய்யப் பலவிதமான செயல்முறைகள் உள்ளன.

கொதி நெய் தயாரிக்கும் முறை :
மருந்துச் சரக்குகளை திரவ பதார்த்தங்களுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து கொதி நெய் தயாரிக்கப்படுகிறது. பெரும்பாலான தைலங்கள் செய்யப்படுகின்றன. இம்முறைப்படிதான். இம்முறையில் எண்ணெய், கியாழம், பால், சாறு, வகைகள் சூரணித்த சரக்குகள், கற்கம் ஆகியன ஒரு பாத்திரத்திலிடப்பட்டு கொதிக்க வைக்கப்படுகின்றன. நீர்ப்பொருள் மற்றும் வற்றிய நிலையில் உரிய பதத்தில் இறக்கி வடிகட்டி எடுத்துக் கொள்ளப் படுகின்றன.
நன்கு பாகமடைந்த நிலைக்கு அறிகுறியாக அக்கலவைகளில் சிறு மாறுதல்கள் தோன்றுகின்றன. தைலத்தின் மேல் பாகத்தில் நுரை கிளம்பும் போது கற்கத்தில் சிறிது எடுத்து விரல்களால் உருட்ட அது திரி போன்று ஆவதுடன் விரல்களையும் பற்றாது. மேலும் அந்த கற்கத்தை சிறிதளவு நெருப்பிலிட்டால் சிடு சிடுப்பு போன்ற சப்தம் உண்டாகாமல் தீவிரமாகப் பற்றியெரியும். பொதுவான அறிகுறிகள் இவ்விதமிருப்பின் சில குறிப்பிட்ட மருந்து உபயோகங்களைக் கருத்தில் கொண்டும் கற்கத்தின் பாகத்திற்கு ஏற்பவும் மிருதுபாகம், மயனபாகம் என்கிற மத்திய பாகம், கரபாகம் என்கிறகரகரப்புப் பாகம் என்ற 3 விதமான பாகங்களில் தைலங்கள் தயாரிக்கப் படுகின்றன.

பொதுவாக மிருது பாகத்தில் தயாரித்த தைலங்களை வாத நோய்களில் உட்கொள்வதற்கும் மயனபாகம் எனும் மத்திய பாகத்தில் தயாரித்த தைலங்களை பித்த நோய்களுக்கான வெளியே உபயோகத்திற்காக கரபாகம் என்கிற கரகரப்புப் பாகத்தில் தயாரித்த தைலம், தலைக்குத் தேய்த்துக் கொள்ளவும், கப நோய்களுக்குப் பயன்படுத்து வதும் நடைமுறையில் உள்ளது. பாகத்தை நிர்ணயித்த கல்கத்தை விரல்களால் அழுத்திப் பார்ப்பது வழக்கம்.
புடநெய் அல்லது குழிப்புட நெய் தயாரிக்கும் முறை :

மருந்துச் சரக்குகளை குழிப்புடப் பொறியில் இட்டு ட்டமிடும் செய்கைக்கு உட்படுத்தி பெறப்படுவது புட நெய் அல்லது குழிப்புட நெய். இம்முறையில் மருந்துச் சரக்குகள் சிதைத்து வடித்தல் என்ற செய்முறைக்கு உட்படுத்தப்படு கின்றன. சில தைல வகைகளை குழித்தைல முறைப்படி தயாரித்துக் கொள்வதே மிகவும் நல்லது என்ற அடிப்படையில் நீண்ட நாட்களாகவே இம்முறை நடைமுறையில் இருந்து வருகிறது. செய்முறையில் கூறப்பட்டுள்ள மருந்துச் சரக்குகளை முதலில் நன்கு பொடித்துக் கொள்ள வேண்டும். ஒரு பெரிய மண்பானையின் அடிப்பாகத்தில் சிறு சிறு துவாரங்கள் இட்டு அத்துவாரங்களின் வழியே கம்பிகளைப் பொருத்திக் கட்டி அவைகள் குடத்திற்கு வெளியே ஒன்று கூடும்படி அமைத்துக் கொள்ள வேண்டும். பொடித்து வைத்துள்ள மருந்துச் சரக்குகளை மேற்படி மண்குடத்திலிட்டு குடத்தின் அளவுக்கு ஏற்ப வெட்டப் பட்டிருக்கும் ஒரு குழியில் வைத்து குடத்தின் அடிப்புறத்தின் கீழ் மற்றொரு சிறு மண்பானையும் வைக்க வேண்டும். செய்முறையில் குறிப்பிட்டுள்ள அளவு வரட்டிகளைக் கொண்டு குடத்தின் பக்கங்களையும் மேற்பாகத்தையும் பரப்பி மூடி, நான்கு பக்கங்களிலும் நெருப்பு வைக்கவும். வரட்டிகள் எரிந்து ஆறிய பின்னர் எடுத்துப் பார்க்க அடியிலுள்ள மண்பாண்டத்தில் குழித் தைலம் இறங்கி இருக்கும். தைலங்கள் பயன்படுத்தும் முறை : சில தைல வகைகள் உள்ளுபயோகத்திற்கு மட்டும் கொடுக்கப்படுகின்றன. சில தைலங்கள் வெளிப்புற உபயோகத்திற்கு மட்டுமே கொடுக்கப்படும். சில தைலங்கள், உள்ளுபயோகம், வெளியுபயோகம் என்ற இரண்டுக்குமே பயனாகிறது. தைலங்களைப் பிடித் தைலமாகப் பயன்படுத்தும் போது உடலின் மயிர்க் கால்கள் எனப்படும் கேச பூமியில் பக்கமாகவே தடவிப் பிடிக்க வேண்டும். மயிர்க் கால்களுக்கு எதிர்த் திசையில் தடவக் கூடாது. தைலம் தடவிப் பிடித்தவுடன் ஒத்தடம் கொடுப்பது மிகவும் நல்லது.
                                  
தூய்மையான ஈரப்பதமற்ற குறுகிய வாயை உடைய கண்ணாடி கொள்கலன்களிலோ அல்லது பாலிதீன் கொள்கலன்களிலோ இவற்றைப் பாதுகாத்து வைக்க வேண்டும். கொள்கலன்களின் மீதே இவற்றைப் பயன்படுத்த வேண்டிய குறிப்புகள் குறிப்பிட வேண்டும். முறைப்படி பாதுகாத்து வந்தால் தைலங்கள் ஓராண்டு வரை தமது நோய் தீர்க்கும் திறனை இழக்காமல் இருக்கும்.

குறிப்பு :
இப்போது சில ஆராய்ச்சியாளர்கள் தைலம் எனப்படும் மருந்து எண்ணெய் உடலில் தேய்க்கும் போது அது தோலில் உள்ள துவாரங்கள் வழியே செல்ல வாய்ப்பில்லை எனவும் தைலம் என்பது நிவாரணம் தரக்கூடிய மருந்து அல்ல எனவும் கூறுகின்றனர். ஆனால் இக்கருத்து உண்மையல்ல. ஏனெனில் மருந்துப் பொருட்களை எண்ணெயில் போட்டு காய்ச்சும் போது மருந்துப் பொருட்களில் உள்ள மிக நுண்ணிய நோய் நீக்கும் மருத்துவ குணம் கொண்ட அணுக்கள் மருந்துப் பொருட்களில் இருந்து எண்ணெயில் கிரகிக்கப்படுகின்றன. ஏனெனில் எல்லாப் பொருட்களும் மிக நுண்ணிய அணுக்களின் கூட்டமாகும். ஒரு அணு தமது தோலில் உள்ள துவாரத்தை விட 100 மடங்கு சிறியது. எனவே மருந்தணுக்கள் கிரகிக்கப்பட்ட எண்ணெய் என்று சொல்லப் படுகின்ற தைலங்களை உடலில் தேய்க்கும் போது மருந்து அணுக்கள் தோலில் உள்ள துவாரங்கள் வழியே உட்சென்று நோயை நிவர்த்தி செய்கிறது.